அரசு கல்லூரி உதவி பேராசிரியருக்கு எதிராக திடீர் போராட்டம்
கோவை அரசு கலைக்கல்லூரியில் சக ஆசிரியை கூறிய புகார் எதிரொலியாக, உதவி பேராசிரியருக்கு எதிராக பேராசிரியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அரசு கலைக்கல்லூரியில் சக ஆசிரியை கூறிய புகார் எதிரொலியாக, உதவி பேராசிரியருக்கு எதிராக பேராசிரியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உதவி பேராசிரியர் மீது புகார்
கோவை அரசு கலைக்கல்லூரியில் தமிழ் துறையில் பணியாற்றி வந்த உதவி பேராசிரியர் ஒருவர் மீது சக ஆசிரியை ஒருவர் தனது பணிக்கு இடையூறு செய்வதாக புகார் அளித்து இருந்தார். இதையடுத்து அந்த உதவி பேராசிரியரை சிவகாசி அரசு கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர், அங்கு பணிக்கு சென்று விட்டு பின்னர், கோவை தொண்டாமுத்தூர் அரசு கல்லூரிக்கு பணியிட மாறுதல் பெற்று வந்து விட்டார்.
இதற்கிடையே உதவி பேராசிரியர் மீது புகார் அளித்த தமிழ்துறை உதவிப்பேராசிரியையிடம், நேற்று காலையில் விசாரணை கமிட்டி முன்பு விசாரணை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. விசாரணையில், கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் அவர் அளித்த புகாரில் உண்மை தன்மையில்லை என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்படும் என அரசு கல்லூரி முதல்வர் அறிவித்து இருந்ததாக தெரிகிறது.
திடீர் போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் பேராசிரியர்கள் கல்லூரி முதல்வரிடம் முறையிட்டனர். பின்னர் திடீரென கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கல்லூரி முதல்வர் மற்றும் தமிழ் உதவி பேராசிரியருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் உலகி நேரில் வந்து போராட்டம் நடத்திய பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்துபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- உதவி பேராசிரியை உயர் கல்வி செயலாளருக்கு அனுப்பிய புகார் தொடர்பாக இயக்குனர் விசாரணை நடத்த எனக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியர், உதவி பேராசிரியைக்கும், கடந்த 6-ந் தேதி விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணை குழுவில் இடம்பெற்ற அரசு துறை சாரா உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத காரணத்தினால் விசாரணை ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று விசாரணை நடத்துவதற்காக மீண்டும் இருவருக்கும் நோட்டீஸ் மூலம் தெரிவிக்கப்பட்டது. பேராசிரியர்களுக்குள் உள்ள பிரச்சினைகளை பெரிதாக்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.