காரைக்குடி தொகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் -மாங்குடி எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு


காரைக்குடி தொகுதியில் செயல்படுத்த   வேண்டிய திட்டங்கள் -மாங்குடி எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 21 Sept 2022 10:00 AM IST (Updated: 21 Sept 2022 10:00 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து கலெக்டரிடம், மாங்குடி எம்.எல்.ஏ. மனு அளித்தார்.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து கலெக்டரிடம், மாங்குடி எம்.எல்.ஏ. மனு அளித்தார்.

மனு

தமிழகத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 முக்கிய கோரிக்கைகள் குறித்த மனுக்களை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மாவட்ட கலெக்டர் மூலம் தனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்தநிலையில், காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி, காரைக்குடி தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய 10 திட்டங்கள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் மனு அளித்தார். அதில் தேவகோட்டை நகராட்சி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் கிடையாது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகள் மட்டுமே உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு உயர்நிலைப்பள்ளியை அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தரவேண்டும்.

கொள்முதல் நிலையம்

சாக்கோட்டை, தேவகோட்டை, கன்னங்குடி ஒன்றிய பகுதிகளில் சுமார் 750-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள விவசாயிகள் மழை பெய்தால் மட்டுமே நன்செய் நிலங்களில் சாகுபடி செய்யமுடிகிறது. மழையில்லாத காலங்களில் இவர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே சமுதாய ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். காரைக்குடி மற்றும் தேவகோட்டை நகர் பகுதியில் தொகுப்பு வீடுகள் கட்ட வேண்டும்.

காரைக்குடியில் அரசு கலைக்கல்லூரிதான் உள்ளது. எனவே புதுவயல், தேவகோட்டை பகுதியில் கூடுதலாக அரசு மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும். காரைக்குடியில் உள்ள குறவர் இன் மக்களுக்கும் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். கண்டனூர் கதர் கிராமத்தொழில் வளாகத்தில் அப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கூடுதலாக அரசு நிதி உதவி செய்து புதிய தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

காரைக்குடி அமராவதிபுதூரில் உள்ள தொழிற்பேட்டையினை புனரமைத்து அந்த பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும். சாக்கோட்டை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சி பெருந்தாக்குடி, ஏத்தநாடு சாலை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கொசவபட்டி இணைப்பு சாலை மற்றும் பாம்பாற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும்..

புறவழிச்சாலை

திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ரஸ்தா பழைய செஞ்சை காட்டம்மன் கோவில் வழியாக காரைக்குடி பழைய பஸ் நிலையம் செல்லும் சாலையை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். காரைக்குடி, அரியக்குடி ெரயில்வே வடக்கு பகுதியிலிருந்து குடிக்காட்டான்பட்டி வழியாக தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்படும் என்பது உள்பட 10 திட்டங்கள் குறித்து மனு அளித்தார்.


Next Story