மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம் விசைத்தறி உரிமையாளர்கள் தொடங்கினர்


மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி  முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம்   விசைத்தறி உரிமையாளர்கள் தொடங்கினர்
x

மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, தமிழக முதல்- -அமைச்சருக்கு கோரிக்கைகள் அடங்கிய தபால்களை அனுப்பும் போராட்டத்தில் சுல்தான்பேட்டை ஒன்றிய விசைத்தறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, தமிழக முதல்- -அமைச்சருக்கு கோரிக்கைகள் அடங்கிய தபால்களை அனுப்பும் போராட்டத்தில் சுல்தான்பேட்டை ஒன்றிய விசைத்தறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மின்கட்டண உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2½ லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இந்த தறிகள் மூலம் தினமும் ரூ.100 கோடி மதிப்பிலான காடா மற்றும் பாலீஸ்டர் ரக துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு, உற்பத்தி செய்யப்படும் துணிகள் ஈரோடு, மும்பை, சூரத், அகமதாபாத் உள்பட பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அங்கு சாயம் ஏற்றப்பட்டு லுங்கி, சட்டை, பேன்ட், திரைசீலை, போர்வை என பல மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மின்இணைப்பிற்கு இரண்டு மாதத்திற்கு விசைத்தறிகளுக்கு 750 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக விசைத்தறியாளர்கள் பெற்று வருகின்றனர். இதற்கு மேல் உள்ள யூனிட்டிற்கு கட்டணம் செலுத்துகின்றனர்.

தபால் அனுப்பும் போராட்டம்

இந்தநிலையில், தமிழக அரசு 36 சதவீதம் வரைமின் கட்டணம் உயர்வை கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்துள்ளது. இதனால், ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ள விசைத்தறித்தொழில் கடுமையாக பாதிக்கும் என விசைத்தறியாளர்கள் கருத்து தெரிவித்தனர். அதனால் புதிய மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பும் போராட்டத்தை தொடங்கினர். இதனைத் தொடர்ந்து சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பல விசைத்தறி உரிமையாளர்கள், நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் உள்ள தமிழக முதல்-அமைச்சரின் தனி பிரிவிற்கும், கிண்டியில் உள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அலுவலகத்திற்கும் தபால் நிலையம் மூலம் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர். சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் சுமார் 5 ஆயிரம் விசைத்தறிகள் உள்ளன. இங்குள்ள விசைத்தறியாளர்கள் பல்லடம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story