கடனுதவி பெற்ற பயனாளிகளின் முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டும்


கடனுதவி பெற்ற பயனாளிகளின் முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டும்
x

டாப்செட்கோ கடன் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்ற பயனாளிகளின் முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழக தலைவர் அறிவுறுத்தினார்.

அரியலூர்

கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கடன் திட்டங்கள் தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் காஜா முகைதீன் தலைமை தாங்கினார். டாப்செட்கோ மேலாண்மை இயக்குனர் அனில்மேஷ்ராம், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் டாப்செட்கோ தலைவர், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரம் மதிப்பில் விலையில்லா தையல் எந்திரங்களும், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.30 ஆயிரம் மதிப்பில் விலையில்லா சலவைப் பெட்டிகளும், கூட்டுறவுத்துறையின் சார்பில் கீழப்பழுவூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் அம்மன் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 19 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் சுயத்தொழில் கடன் உதவிகளும் என மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அறிவுறுத்தல்

தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் டாப்செட்கோ கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள தனிநபர் கடன், சுய உதவிக்குழு கடன், கறவை மாட்டுக்கடன் மற்றும் நீர்ப்பாசன கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன் திட்டங்கள் குறித்தும், பயனாளிகளின் எண்ணிக்கை, பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கடன் உதவித்தொகை, மொத்த நிதி ஒதுக்கீடு மற்றும் கடந்தாண்டுகளில் அரியலூர் மாவட்டத்தில் செய்யப்பட்ட சாதனைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

மேலும் டாப்செட்கோ கடன் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்ற பயனாளிகள் இதனை உரிய முறையில் பயன்படுத்தி முன்னேறுவதை உறுதி செய்வதுடன், தகுதியுள்ள பயனாளிகள் அனைவரையும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் அறிவுறுத்தினார்.

கள ஆய்வு

பின்னர் அவர், அரியலூர் மாவட்டம், திருமானூரில் டாப்செட்கோ கழகத்தின் மூலம் பல்வேறு கடனுதவி பெற்ற பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு திட்டங்கள் குறித்தும், திட்டங்களின் பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்தும் பயனாளிகளிடம் நேரடியாக கேட்டறிந்தார். பின்னர் தமிழக அரசின் டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்ற பயனாளிகள் இதனை முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டுமெனவும் பயனாளிகளுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story