காலி பணியிடங்களை நிரப்ப கோரி சத்துணவு ஊழியர்கள் ரத்த கையெழுத்து இயக்கம்
காலி பணியிடங்களை நிரப்ப கோரி, சத்துணவு ஊழியர்கள் ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
கோத்தகிரி: சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ரத்த கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது. இதற்கு கோத்தகிரி வட்ட கிளை தலைவர் சசிகலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லதுரை முன்னிலை வகித்தார். செயலாளர் விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
இதில் கலந்துகொண்டவர்கள் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை மற்றும் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும், உணவு மானியத்தை மாதந்தோறும் 5-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து 62 சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை மனுவில் தங்களது ரத்தத்தால் கைரேகை வைத்தனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களிலும் ரத்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வருகிற 30-ந் தேதி மாவட்டம் முழுவதிலும் உள்ள சத்துணவு ஊழியர்கள் ஒன்றிணைந்து கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம், ரத்தத்தால் கையெழுத்திட்ட மனு அளிக்கப்படுகிறது. அவர் மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அந்த மனு அனுப்பப்பட உள்ளது என்றனர்.