படிக்கும் போது வேலைக்கு செல்ல ஆசைபடக்கூடாது; கலெக்டர் பேச்சு
படிக்கும் போது வேலைக்கு செல்ல ஆசைபடக்கூடாது என்று கலெக்டர் முருகேஷ் கூறினார்.
படிக்கும் போது வேலைக்கு செல்ல ஆசைபடக்கூடாது என்று கலெக்டர் முருகேஷ் கூறினார்.
உயர்கல்வி வழிகாட்டு முகாம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2021-22-ம் கல்வி ஆண்டில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்து உயர்கல்வி தொடர முடியாத மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டு கால கொரோனா பாதிப்பில் இருந்து அரசின் சீரிய நடவடிக்கையின் காரணமாக இன்றைக்கு மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவர முடிகிறது. சில மாணவர்கள் குடும்ப சூழல்நிலை காரணமாகவும், நிதி பற்றாக்குறை காரணமாகவும் உயர் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படுகின்றது.
கல்வி ஒன்று தான் நம்முடைய சொத்து. படிக்கும் போது வேலைக்கு செல்ல ஆசை படக்கூடாது. எப்போது வேண்டும் என்றாலும் வேலைக்கு செல்லலாம், ஆனால் குறிப்பிட்ட வயதில் மட்டுமே படிக்க இயலும். குறைந்த வருமானத்திற்காக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு செல்லாமல், நன்கு படித்து நிறைய சம்பாதிக்க ஆசைப்பட வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 41 பள்ளிகளில் இருந்து 252 மாணவர்கள் உயர்கல்வி தொடராமல் உள்ளனர். இந்த பட்டியலில் 10 மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது தவறான நடவடிக்கை.
குழந்தை திருமணம்
குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டும். குழந்தைகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிந்த வரைக்கும் உயர் கல்வி படிக்க வேண்டும். படிப்பிற்காக எதையும் விட்டு கொடுக்கலாம். ஆனால் எதற்காகவும் படிப்பை மட்டும் விட்டு கொடுக்காதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் மேற்கு ஆரணி, தொள்ளார், பெரணமல்லூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு ஆகிய தாலுகாக்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ராமலிங்கம், விரிவுரையாளர்கள் கமலி, உமாபிரியா, மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் தனகீர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.