கோட்டூர் வழியாக முத்துப்பேட்டைக்கு பஸ் இயக்க வேண்டும்
திருவாரூரில் இருந்து கோட்டூர் வழியாக முத்துப்பேட்டைக்கு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டூர்:
திருவாரூரில் இருந்து கோட்டூர் வழியாக முத்துப்பேட்டைக்கு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைநகரம் செல்ல...
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் 49 ஊராட்சிகளையும், 185 உள்கிராமங்களையும் கொண்ட ஊராட்சி ஒன்றியமாகும். கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட தலைநகரம் திருவாரூருக்கு செல்ல வேண்டும் என்றால் அதிகபட்சமாக 20 கிலோமீட்டர் தூரம் உள்ள மன்னார்குடிக்கு செல்ல வேண்டும்.
அல்லது திருத்துறைப்பூண்டி நகரங்களுக்கு சென்று அங்கிருந்து திருவாரூர் செல்ல வேண்டும். மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட முத்துப்பேட்டை தாலுகா தலைநகரத்திற்கு செல்வதற்கும் நேரடியான பஸ் வசதி கிடையாது. எனவே திருவாரூரில் இருந்து கோட்டூர் வழியாக முத்துப்பேட்டைக்கு நேரடியாக பஸ் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருவாய் கிராமங்கள் இணைப்பு
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
கோட்டூர் ஒன்றியம் போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத குக்கிராமங்களை கொண்ட ஒன்றியம் ஆகும். தேவதானம், களப்பால், விக்கிரபாண்டியம், திருநெல்லிக்காவல் ஆகிய பகுதிகளில் இருந்து மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி நகரங்களுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் முத்துப்பேட்டை தாலுகா புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கோட்டூர் பகுதியை சேர்ந்த 18-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கோட்டூர் பகுதியில் இருந்து தாலுகா தலைநகரமான முத்துப்பேட்டைக்கு செல்வதற்கு நேரடியான பஸ் வசதி கிடையாது. அதேபோல் தலைநகரமான திருவாரூர் செல்வதற்கும் நேரடியாக பஸ்வசதி கிடையாது.
பஸ் வசதி வேண்டும்
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வணிகர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவரும் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக மாவட்ட தலைநகரம் மற்றும் தாலுகா தலைநகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. திருவாரூரில் இருந்து முத்துப்பேட்டைக்கு நேரடி பஸ் வசதிகள் இல்லாததால் பல்வேறு சிரமங்களை தினம்தோறும் இப்பகுதி கிராம மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
எனவே கோட்டூர் பகுதி கிராம மக்களின் நலன் கருதி திருவாரூரில் இருந்து திருநெல்லிக்காவல், விக்கிரபாண்டியம், கோட்டூர், காடுவாக்குடி, களப்பால், வேதபுரம், தேவதானம், குமட்டி திடல், சித்தமல்லி வழியாக முத்துப்பேட்டைக்கு பஸ் இயக்க வேண்டும். மேலும் இந்த வழித்தடத்தில் சாலைவசதி மேம்படுத்த பட்டுள்ளதால் காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளைகளிலும் தினசரி பஸ் இயக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.