தொடர் விலை சரிவை தடுக்க4 கோடி முட்டைகளை வாங்கும்பண்ணையாளர்கள்


தொடர் விலை சரிவை தடுக்க4 கோடி முட்டைகளை வாங்கும்பண்ணையாளர்கள்
x

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதை தடுக்க தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்யும் விலைக்கே 4 கோடி முட்டைகளை வாங்க பண்ணையாளர்கள் முடிவு செய்து உள்ளனர்.

நாமக்கல்

தொடர் சரிவு

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 31-ந் தேதி முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாக இருந்தது. அது 1-ந் தேதி 20 காசுகளும், 2-ந் தேதி 15 காசுகளும் குறைக்கப்பட்டு 4 ரூபாயாக தொடா்ந்து சரிவடைந்து உள்ளது. வடமாநிலங்களில் பண்டிகை காலம் என்பதால், பிற மண்டலங்களில் முட்டை விற்பனை சரிவடைந்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை கொள்முதல் விலை குறைக்கப்பட்டு வருகிறது.

இதை பயன்படுத்தி கொண்டு வியாபாரிகள் சிலர், பண்ணையாளர்களிடம் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து குறைத்து வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

4 கோடி முட்டைகளை வாங்க முடிவு

எனவே முட்டை கொள்முதல் விலையின் தொடர் சரிவை தடுக்க தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல அலுவலகத்தில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் பண்ணையாளர்கள் அடங்கிய சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கியமாக முட்டை மைனஸ் விலையை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் முட்டை விலை தொடர் சரிவை தடுக்கும் விதமாக பண்ணையாளர்கள் இணைந்து, 51 கிராமில் இருந்து 55 கிராம் எடையுள்ள 4 கோடி முட்டைகளை வாங்குவது என முடிவெடுக்கப்பட்டது. அதற்கு தேவையான முதலீட்டை கூட்டத்திற்கு வந்திருந்த பண்ணையாளர்கள் அளிக்க முன்வந்தனர்.

உபரியான முட்டைகள்

இது குறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழுவின் நாமக்கல் மண்டல துணை தலைவர் சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்த கூட்டத்திற்கு வராத பண்ணையாளர்களும், முட்டை கோழிப்பண்ணை தொழிலை சரிவிலிருந்து மீட்கும் இந்த முயற்சியில் கலந்து கொள்ள விரும்பினால் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு அலுவலகம் அல்லது தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனமும் இணைந்து பண்ணையாளர்கள் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு அறிவிக்கும் விலைக்கு முட்டை விற்பதை உறுதிப்படுத்தும் விதத்திலும், வியாபாரிகள் மைனஸ் விலைக்கு வாங்குவதை தடுக்கும் நோக்கிலும் கோழிப்பண்ணை உரிமையாளர்களிடம் உபரியாக உள்ள 51 கிராம் முதல் 55 கிராம் வரை எடையுள்ள முட்டைகளை தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு அறிவிக்கும் விலைக்கே பண்ணைகளில் வந்து கொள்முதல் செய்ய இருக்கிறார்கள்.

எனவே பண்ணையாளர்கள் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கும் விலைக்கு மட்டுமே முட்டைகளை விற்க வேண்டும். மைனஸ் விலைக்கு வியாபாரிகள் யாராவது கேட்டால் தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்கத்தையோ அல்லது தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தையோ அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story