காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்- கலெக்டர் பேச்சு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்- கலெக்டர் பேச்சு
x

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சசூழலை பாதுகாக்க பொதுமக்கள் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.

காஞ்சிபுரம்

சுற்றுச்சூழல் தின விழா

சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5-ந்தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதனடிப்படையில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் உலக சுற்றுச்சூழல் தின விழா மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கூறியதாவது:-

1972-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 5-ந்தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக அறிவித்தது. பொதுமக்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆண்டுதோறும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. முதல் உலக சுற்றுச்சூழல் தினமானது, 1974-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. 1987-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள உறுப்பு நாடுகளில் இருந்து ஏதேனும் ஒரு நாடு ஒரு கருப்பொருளை மையமாக வைத்து உலக சுற்றுச்சூழல் தினத்தை ஏற்று நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2022-ம் ஆண்டு, ஒரே ஒரு பூமி என்பதை கருப்பொருளாகக் கொண்டு ஸ்வீடன் நாடு ஏற்று நடத்துகிறது.

அதிக அளவில் மரக்கன்றுகள்

அதிகமாக நகரமயமாக்கல், தொழிற்பெருக்கம் மற்றும் நாகரிக மாற்றத்தால் சுற்றுச்சூழல் மாசடைந்து, பூமியில் வாழ்கின்ற உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அரசு முயற்சிகளால் மட்டுமே சுற்றுச்சூழல் மாசுபடுவதை திறம்பட கட்டுப்படுத்த இயலாது என்பதால் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது.

மேலும் இந்த ''ஒரே ஒரு பூமி'' என்ற முழக்கம் குறித்து இயற்கையுடன் இணக்கமாக நீடித்து வாழ்வதன் அவசியம் குறித்தும், பசுமை வாழ்க்கை முறைக்கு மாறுவது குறித்தும் கவனம் செலுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சுறறுச்சசூழலை பாதுகாக்க பொதுமக்கள் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் அதிக அளவில் மரக்கன்றுகளை நட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு சிறப்பாக பங்களிப்பு ஆற்றியதற்காக கலந்து கொண்ட 16 தொழிற்சாலைகள் மற்றும் தன்னார்வலர்களில் 3 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் 2 பேருக்கு பசுமை விருதை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார்.

மேலும் ஒருவருக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் பசுமை விருது மற்றும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கினார்.

மாணவ - மாணவிகளுக்கு சான்றிதழ்

மேலும் 2021-ம் ஆண்டில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கான மாற்று பொருட்கள் குறித்து, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை பள்ளி, மேல் நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் ரவிச்சந்திரன், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

தேவேரியம்பாக்கம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம், தோண்டங்குளம், கிராம பகுதிகளில் அரசுக்குசொந்தமான தரிசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு பயன்தரும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.

மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்ட தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி கூறி தமிழக அரசின் உத்தரவின்படி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மஞ்சள் பைகளை இலவசமாக வழங்கினார்கள். விழாவில் வாலாஜாபாத் ஒன்றிய குழு துணைத் தலைவர் சேகர், குண்ணவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி குப்புசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமார், தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோவிந்தராஜன், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பாப்பாங்குழி

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பாப்பாங்குழி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தங்கினார். பாப்பாங்குழி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் தமிழக சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி ரூ. 8 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான ஏரிகள் புணரமைப்பு பணியை தொடங்கி வைத்தார்.

விழாவில் ஒன்றிய குழுத்தலைவர் கருணாநிதி, ஸ்ரீபெரும்புதூர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பவானி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட கவுன்சிலர்கள் ராமமூர்த்தி பாலா மற்றும் பலர் பங்கேற்றனர்

மண்ணிவாக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சியில் 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கஜலட்சுமி சண்முகம் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுமதி லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற செயலர் ராமபக்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story