முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்க கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: பா.ஜ.க.வினர் வலியுறுத்தல்


முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்க  கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்:  பா.ஜ.க.வினர் வலியுறுத்தல்
x

முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பா.ஜ.க.வினர் வலியுறுத்தினர்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி தலைமையில், அமைப்புச்சாரா தொழிலாளர் பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் வந்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், "முல்லைப்பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று கேரள மாநிலம் தொடுபுழா அருகே வெள்ளியமட்டம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், முல்லைப்பெரியாறு அணை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், வெள்ளியமட்டம் ஊராட்சியின் தீர்மானத்துக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றி முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்கக்கோரியும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு அனைத்து கிராம ஊராட்சிக்கும் சுற்றறிக்கை அனுப்பி, நிறைவேற்றிய தீர்மானத்தை முதல்-அமைச்சர் பார்வைக்கு அனுப்ப வேண்டும்" என்று கூறியிருந்தனர்.


Next Story