பச்சைத் தேயிலைக்கு உரிய விலை வழங்கக்கோரிகோத்தகிரியில் 6-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்-அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை


பச்சைத் தேயிலைக்கு உரிய விலை வழங்கக்கோரிகோத்தகிரியில் 6-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்-அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 6 Sep 2023 7:30 PM GMT (Updated: 6 Sep 2023 7:31 PM GMT)

பச்சைத் தேயிலைக்கு உரிய விலை வழங்கக்கோரி கோத்தகிரியில் 6-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நீலகிரி

கோத்தகிரி

பச்சைத் தேயிலைக்கு உரிய விலை வழங்கக்கோரி கோத்தகிரியில் 6-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

6-வது நாளாக போராட்டம்

தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த கோரியும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் இம்மாதம் இறுதி வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சிறு தேயிலை விவசாயிகள் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பொரங்காடு சீமை நல சங்க தலைவர் தியாகராஜன் தலைமையில் கோத்தகிரி நட்டக்கல் கோவில் மைதானத்தில் 6 -வது நாளான நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தை 19 ஊர் தலைவர் ராமாகவுடர், கடைகம்பட்டி தலைவர் ஹாலாகவுடர், ஜக்கலோடை ஊர் நிர்வாகி சாரி, கெச்சிகட்டி சந்திரன், கப்பட்டி ஊர் தலைவர் அஜ்ஜன், சேலக்கொரை ஊர் தலைவர் ராஜீ, உயிலட்டி ராமசந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அமைச்சர் பேச்சுவார்த்தை

6 -வது நாள் உண்ணாவிரத போராட்டத்தில் கடைகம்பட்டி, ஜக்கலோடை, கெச்சிகட்டி, கப்பட்டி, சேலக்கொரை கிராமங்களை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைத்து கிராம மக்களும் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தையம்மனை வழிபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை நேற்று சந்தித்த சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், விவசாயிகளின் இந்த பிரச்சினையை விரைவில் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதுபோல உல்லத்தி, இத்தலார் பகுதிகளிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story