சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்


சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்
x

நாயகனைபிரியாள் கோட்டை முனீஸ்வரன் கோவிலில் நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

திருட்டு

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள நாயகனைபிரியாள் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலை அந்த கிராமத்தில் வசித்து வரும் 4 வகையறாவினர் நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. கோட்டை முனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 6 மாதங்களுக்கு மேலாகிறது. கும்பாபிஷேகம் முடிந்த சில நாட்களிலேயே கோவில் உண்டியல் மர்மநபர்களால் உடைக்கப்பட்டு ரூ.1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் மற்றும் கோவில் பூஜை பொருட்கள் திருடப்பட்டது.

புகார்

இதேபோன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் 2 முறை இதே கோவிலில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், கோவிலை நிர்வகிப்பதில் ஒரு தரப்பினர் தலையீடு செய்வதாகவும், கோவில் திருட்டு சம்பவத்தில் காணாமல்போன பொருட்களை அந்த தரப்பினர் வைத்திருப்பதால், அத்தரப்பினர் மீது திருட்டு சம்பவங்கள் தொடர்பாக சந்தேகம் உள்ளதாகவும் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தா.பழூர் போலீஸ் நிலையத்தில் நாயகனைபிரியாள் கிராமத்தை சேர்ந்த கோவில் நிர்வாகத்தில் தொடர்புடைய மற்ற தரப்பினர் புகார் மனு அளித்துள்ளனர்.

போராட்டம்

புகார் மீது போலீசார் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த புகார் மனு அளித்த தரப்பினர் கோட்டை முனீஸ்வரன் கோவில் முன்பு நேற்று ஒன்று திரண்டனர். அப்போது புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தி, குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவில் முன்பு காத்திருந்து அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story