சுற்றுலா வந்த கேரள வாலிபர்களிடம் நகை பறிப்பு; 3 பேர் கைது


சுற்றுலா வந்த கேரள வாலிபர்களிடம் நகை பறிப்பு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 July 2023 6:45 PM GMT (Updated: 26 July 2023 6:45 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த கேரள வாலிபர்களிடம் நள்ளிரவில் 5 பவுன் தங்க சங்கிலி பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த கேரள வாலிபர்களிடம் நள்ளிரவில் 5 பவுன் தங்க சங்கிலி பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரள வாலிபர்கள்

கேரள மாநிலம் எர்ணாகுளம் புதுர்வேலிகாரா பகுதியை சேர்ந்த ஜாய் என்பவரின் மகன் ஹான்சன் டாம் ஜாய் (வயது 34). இவர் அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த 17-ந் தேதி தன் நண்பரான ஜெய்பால் பைசல் என்பவருடன் காரில் புறப்பட்டு ராமநாதபுரம் வந்துள்ளார். ராமேசுவரம் தனுஷ்கோடி சென்று சுற்றி பார்த்து விட்டு ஊருக்கு திரும்பி சென்றுள்ளனர்.

ராமநாதபுரம் அருகே சத்திரக்குடி சோதனைச்சாவடி அருகில் காரை நிறுத்தி இளைப்பாறி உள்ளனர். ஹான்சன் டாம் ஜாய் காரின் பின்பகுதியில் நின்று தனது மடிக்கணினியில் அலுவலக வேலை தொடர்பான தகவலை பார்த்து கொண்டிருந்தாராம். அப்போது நள்ளிரவில் 2 மணி அளவில் அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் காரின் அருகில் வந்துள்ளனர். ஏன் இந்த நேரம் இவ்வாறு பாதுகாப்பில்லாத இடத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டு அவர்கள் பேச்சு கொடுத்துள்ளனர். அவர்களின் சத்தம் கேட்டு காரின் உள்ளே இருந்த ஜெய்பால் பைசலும் வந்துவிட்டார்.

நகை பறிப்பு

அவர்கள் தாங்கள் சுற்றி பார்க்க வந்துள்ளதாக தெரிவித்த போது கண் இமைக்கும் நேரத்தில் ஹான்சன் டாம் ஜாய் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி உள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத 2 பேரும் காரை எடுத்து கொண்டு விடாமல் துரத்தி உள்ளனர்.

ராமநாதபுரம் அருகே வந்த போது 3 பேரும் ஆளுக்கொரு திசையில் சென்று மறைந்துவிட்டனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த கேரள வாலிபர்கள் இருவரும் அந்த வழியாக வந்தவர்களிடம் விசாரித்து ஹலோ போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

3 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சத்திரக்குடி போலீசார் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்தனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது:-

கேரள வாலிபர்களிடம் தங்க சங்கிலியை பறித்து சென்றவர்கள் தப்பி ஓடியதும் அந்த வழிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தோம்.

கேரளா வாலிபர்கள் அளித்த தகவல் மற்றும் அடையாளங்களின் அடிப்படையில் விசாரித்தபோது கண்காணிப்பு கேமரா காட்சியில் 3 பேரும் அடையாளம் தெரிந்தது.

இதனை தொடர்ந்து பரமக்குடி முசாபர்கனிதெரு சாகுல்ஹமீது மகன் வாவாகனிராவுத்தர் (23), ஜியாவுதீன் மகன் அகமது பயாஸ் (21), பாலன்நகர் ஜலால் மைதீன் மகன் முஸ்தாக் (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தோம். அவர்களிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் 3 பேரும் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளோம். கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story