பயணம் செய்த முதியவரிடம்பணம்-செல்போன் பறித்த ஆட்டோ டிரைவர் கைது


பயணம் செய்த முதியவரிடம்பணம்-செல்போன் பறித்த ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 4 March 2023 6:45 PM GMT (Updated: 4 March 2023 6:46 PM GMT)

தேனி அருகே ஆட்டோவில் பயணம் செய்த முதியவரிடம் பணம், செல்போன் பறித்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேனி அருகே உள்ள மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஒச்சானத்தேவர் (வயது 63). இவர் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு கடந்த 24-ந்தேதி இரவு தேனி பழைய பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து ஒரு ஆட்டோவில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். மாரியம்மன்கோவில்பட்டி அருகே புறவழிச்சாலையில் சென்ற போது ஆட்டோ டிரைவர் மற்றும் அதில் இருந்த மற்றொரு நபர் ஆகிய இருவரும் சேர்ந்து ஒச்சானத்தேவரை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.10,850 மற்றும் செல்போனை பறித்தனர்.

பின்னர் அவரை நடு வழியில் இறக்கி விட்டுவிட்டு இருவரும் ஆட்டோவில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து அவர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில், அந்த ஆட்டோவை ஓட்டி வந்தது அல்லிநகரம் பாத்திமா தியேட்டர் தெருவை சேர்ந்த கார்த்திக் (27) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் கூட்டாளியான சுக்குவாடன்பட்டியை சேர்ந்த விசாகன் (35) என்பவருடன் சேர்ந்து ஒச்சானத்தேவரிடம் பணம், செல்போன் பறித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். விசாகனை தேடி வருகின்றனர். கைதான கார்த்திக் மீது ஏற்கனவே 3 திருட்டு வழக்குகள் உள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.


Next Story