நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறவிவசாயிகள் வேண்டுகோள்
பெரம்பலூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் குறித்து பேசினர். சில விவசாயிகள் கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் அளித்தனர். கூட்டத்தில் விவசாயி ராமராஜன் விவசாய கிணறுகள் புதியதாக வெட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி தெரிவித்தார். விவசாயி ராஜூ பேசுகையில், கோடை மழையினால் பாதிக்கப்பட்ட எள், மக்காச்சோள பயிர்களுக்கு விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். வேப்பந்தட்டை வட்டாரத்தில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும். உரத்தட்டுபாடு ஏற்படாத நிலையை உருவாக்க வேண்டும், என்றார்.
அறிவிக்கப்படாத மின் வெட்டு
விவசாயி நீலகண்டன் பேசுகையில், கல்லாற்றில் உடைப்பை சரி செய்ய வேண்டும். தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெல்லினை வாரத்தில் 2 நாள்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். அறிவிக்கப்படாத மின் தடையை சரி செய்ய வேண்டும். விவசாயி விநாயகம் பேசுகையில், தெரணி ஏரியின் மதகுகளை சரி செய்து, பாசன வாய்க்கால்களை தூர் வார வேண்டும். பருத்திக்கு கொட்டகை மானியம் மூலம் அமைத்து தர வேண்டும், என்றார்.
கால்நடைகளுக்கு பாலி கிளினிக் திறந்திடவும்...
விவசாயி ஏ.கே.ராஜேந்திரன் பேசுகையில், வேப்பூர் ஏரியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து, தூய்மைப்படுத்த வேண்டும். வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும். எறையூர் சர்க்கரை ஆலை மூலம் வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையை கரும்பு விவசாயிகளுக்கு விரைந்து வழங்க வேண்டும், என்றார். விவசாயி ரமேஷ் பேசுகையில், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முகாம் நடத்த வேண்டும், பால் உற்பத்தியில் சிறப்பிடம் பெற்ற பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு வசதியாக பாலி கிளினிக் திறந்திட வேண்டும். மேலும் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். விவசாயி வரதராஜன் பேசுகையில், கால்நடைகளுக்கு நோய்கள் தாக்குவதற்கு முன்னதாகவே முகாம் நடத்தி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். விவசாயி ராஜாசிதம்பரம் பேசுகையில் வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளுக்கு மக்காச்சோள விதைகளை ஆய்வு செய்து தரமான விதைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். விவசாயி செல்லதுரை பேசுகையில் தோட்டக்கலைத்துறை மூலம் வெங்காய கொட்டகை அதிகளவில் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர் கற்பகம் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை உரிய விளக்கம் அளிக்க வைத்தார்.
நில ஒருங்கிணைப்பு சட்டம்
முன்னதாக கூட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் விவசாயிகள் எழுந்து நின்று தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்த நில ஒருங்கிணைப்பு சட்டத்தினால் தொழில் முனைவோர்களால் நீர் நிலைகள் கையகப்படுத்த வாய்ப்புள்ளதால், நிலத்தடி நீர் மட்டம் குறைய வாய்ப்புள்ளது. இந்த சட்டத்தினால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள். இந்த நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றனர். பின்னர் அவர்கள் இது தொடர்பான மனுவினை கலெக்டரிடம் வழங்கினர். முன்னதாக கலெக்டர் கோடை காலத்தில் எவ்வாறு உழவு மேற்கொள்ள வேண்டும், உழவன் செயலியினை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, வேளாண்மை இணை இயக்குனர் சங்கர்.எஸ்.நாராயணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் இந்திரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.