காரில் புகையிலைபொருட்கள் கடத்திய 2 பேர் கைது
பெங்களூரில் இருந்து காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரில் இருந்து காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நள்ளிரவு வாகன சோதனை
மதுரை நகரில் திருட்டு, கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்க 3 நாட்கள் தொடர்ந்து நள்ளிரவு ஹோமிங் ஆபரேசன் நடத்த போலீசாருக்கு கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகச்சாமி மேற்பார்வையில், டவுன் உதவி கமிஷனர் செல்வின், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நள்ளிரவு 1.30 மணிக்கு பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது இன்ஸ்பெக்டரின் கார் டிரைவர் ராஜேஸ் அந்தவழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். மேலும், அந்த காரில் இருந்த 2 பேர் மீதும் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை கீழே இறங்க சொல்லி உள்ளே இருந்த 2 பையை சோதனை செய்தனர். அதில் மேலே துணிமணிகள் இருந்தது. அதற்கு கீழே புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
17 கிலோ புகையிலை பொருட்கள்
போலீசாரின் விசாரணையில் இருவரும் மதுரையை சேர்ந்த காசிவிஸ்வநாதன், அவரது கார் டிரைவர் ராஜேஸ் என்பது தெரியவந்தது. இதில் காசிவிஸ்வநாதன் மீது போதை பொருட்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்டு, அது குறித்த வழக்கு பெங்களூரில் நடந்து வருகிறது. தற்போது பெங்களூர் சென்றவர் அங்கிருந்து புகையிலை பொருட்களை வாங்கி பஸ்சில் மதுரைக்கு கொண்டு வந்துள்ளார்.
பின்னர் ஆரப்பாளையம் பஸ்நிலையத்தில் இருந்து காரில் திருமங்கலம் வழியாக அதனை கடத்தி கொண்டு செல்லும் போது வாகன சோதனையில் சிக்கினார். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிவிஸ்வநாதன், ராஜேஸ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 17 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு
நள்ளிரவு வாகன சோதனையில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த உதவி கமிஷனர் செல்வின், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், டிரைவர் ராஜேஸ் உள்ளிட்ட 8 பேரை போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
மேலும் இதே போன்று நள்ளிரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டால் குற்றவாளிகள் வாகனங்களில் தப்பி செல்ல முடியாது என்று கமிஷனர் தெரிவித்தார்.