பள்ளி மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் புகையிலை பொருட்கள்
பரமக்குடியில் பள்ளி மாணவர்களை குறிவைத்து புகையிைல பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பரமக்குடி,
பரமக்குடியில் பள்ளி மாணவர்களை குறிவைத்து புகையிைல பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
போதை பொருட்கள்
நாட்டின் எதிர்காலம் இளைய தலைமுறையினரின் கையில்தான் உள்ளது என முழங்கி வருகிறோம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் போதை பொருட்கள் உபயோகத்தால் இளைய தலைமுறை சீரழிந்து வருகிறது. அதற்கு குடும்ப சூழ்நிலை, நண்பர்களின் தவறான நட்பு உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக இளைஞர்கள் அதிக அளவு போதை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக கல்லூரிகள், பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான் அதிக அளவு போதைக்கு அடிமையாகி வருகின்றனர் என்பது வேதனைக்குரியதாகும். தற்போது பரமக்குடி பகுதியில் உள்ள சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதை அதிகமாக வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில்
சில பள்ளிகளின் வளாகத்திற்குள்ளேயே புகையிலை பொருட்களின் காலி பாக்கெட்டுகள் கிடப்பதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சின்ன சின்ன பாக்கெட்டுகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதை இளைஞர்களும், மாணவர்களும் வாங்கி வாயின் உதடுகளின் இடுக்கு பகுதியில் வைத்து கொள்கின்றனர்.
அதனை வாயில் வைத்த சில நிமிடங்களிலேயே அவர்கள் மயக்க நிலைக்கு சென்று விடுகின்றனர். அவர்களை பார்த்து சந்தேகம் அடையும் ஆசிரியர்கள் அவர்களிடம் ஏதாவது கேட்டால் முன்னுக்கு பின் முரணான பதில்களை கூறி என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் இருக்கின்றனராம்.
கடும் நடவடிக்கை
இந்த போதை புகையிலையால் இளைஞர்களும், மாணவர்களும் சீரழிந்து வருவதோடு அவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி வருகிறது. தமிழக அரசு போதை பொருட்களுக்கு எதிராக எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தியும் போதை பொருட்களின் விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.
இதே நிலை தொடர்ந்தால் இளைஞர்கள், மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். எனவே, தடை செய்யப்பட்ட போதை புகையிலை மற்றும் போதை பாக்குகளை விற்பனை செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்