அரியலூரில் இன்று புனித லூர்து அன்னை ஆலய பெரிய தேர் பவனி


அரியலூரில் இன்று புனித லூர்து அன்னை ஆலய பெரிய தேர் பவனி
x

அரியலூர் புனித லூர்து அன்னை ஆலய பெரிய தேர் பவனி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

அரியலூர்

புனித லூர்து அன்னை ஆலயம்

அரியலூர் பொன்னுசாமி அரண்மனை தெருவில் புனித லூர்து அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் புனித லூர்து அன்னையிடம் பிரார்த்தனை செய்து பலன் பெற்று வருகின்றனர். இந்தநிலையில், கடந்த 1936-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந் தேதி குடந்தை மறை மாவட்டத்தின் முதல் ஆயர் பீட்டர் பிரான்சிஸ் தூய லூர்து அன்னை ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் புதிய தேர் பவனி நடந்தது.

இந்த ஆலயத்திற்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து 3 மாதா சொரூபங்கள் கொண்டு வரப்பட்டன. இதில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூண்டியில் புதுமை மாதாவாகவும், சென்னை சேத்துப்பட்டில் திருத்தல மாதாவாகவும், அரியலூரில் புனித லூர்து அன்னையாகவும் நிறுவப்பட்டன.

புதிய ஆலயம்

இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு பங்குத்தந்தை அந்தோணி சாமி முயற்சியால் மேல அக்ரஹாரம் தெருவில் புதிய ஆலயம் கட்டும் பணி தொடங்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. 2019-ம் ஆண்டு பொறுப்புக்கு வந்த பங்குத்தந்தை டொமினிக் சாவியோ தேவாலயம் முழுவதும் அழகுப்படுத்தி தற்போது நிர்வகித்து வருகிறார்.

புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித நிகழ்ச்சிகளும் நடைபெறாமல் இருந்தது.

பெரிய தேர் பவனி

இந்த நிலையில் புனித லூர்து அன்னை ஆலயத்தில் 10 நாள் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையொட்டி கடந்த 2-ந் தேதி திருப்பலி நடைபெற்று தேவாலயத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. தினசரி சிறிய தேர் பவனி மற்றும் சிறப்பு திருப்பலி வழிபாடுகள் நடந்தன. விழாவின் சிகர நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

லூர்து அன்னை சிறப்பு அலங்காரத்துடன் அரியலூர் நகரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி நடைபெறுகிறது. அரியலூர் நகரில் உள்ள அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை டொமினிக் சாவியோ மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளார்கள்.


Next Story