பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னையில் இன்று அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை,
ஒற்றை தலைமை விவகாரம் அ.தி.மு.க.வில் புயலை வீசியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியினர் அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு நிகழ்வாக அ.தி.மு.க.வின் அங்கீகாரமிக்க நாளேடான 'நமது அம்மா' பத்திரிகையின் நிறுவனர் என்ற பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் என்ற பெயரில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 27-ந் தேதி (இன்று) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தலைமை அலுவலகத்தின் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.