பாளையம் சுங்கச்சாவடியில் சுகாதார சீர்கேடுகழிப்பிடத்தை பூட்ட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு


பாளையம் சுங்கச்சாவடியில் சுகாதார சீர்கேடுகழிப்பிடத்தை பூட்ட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 31 Dec 2022 6:45 PM GMT (Updated: 31 Dec 2022 6:45 PM GMT)
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பாளையம் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சுங்கச்சாவடியின் இருபுறமும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்காக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சேலம்- தர்மபுரி சாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பிட கட்டிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதியில் அமைக்கப்பட்ட பள்ளத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மேலும் அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதனை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ள கழிப்பிட கட்டிடங்களை நேற்று பூட்டு போட்டு பூட்டுவதற்காக திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அறிந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் பூட்டு போட வந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் சம்மந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தில் மண் கொட்டி கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்தனர்.


Next Story