கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.108-க்கு ஏலம்


கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.108-க்கு ஏலம்
x
தினத்தந்தி 1 July 2023 6:00 AM IST (Updated: 1 July 2023 6:00 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து கிலோ ரூ.108-க்கு ஏலம் போனது.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து கிலோ ரூ.108-க்கு ஏலம் போனது.

கிலோ ரூ.108-க்கு விற்பனை

கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் சுல்தான்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் அறுவடை செய்யும் தக்காளிகளை கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் நடைபெறும் ஏலத்தில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த தக்காளிகளை ஏலம் கேட்க கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோவை, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர். தற்போது கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி வரத்து பெருமளவு இல்லாததால் கிணத்துக்கடவு மற்றும் சுல்தான்பேட்டை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இருந்து குறைந்த அளவு தக்காளிகள் மட்டும் ஏலத்தில் விற்பனைக்கு வருகின்றன. கடந்த 25-ந் தேதி ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் 73 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது வெளி மாநிலத்திலிருந்து தக்காளி வரத்து இல்லாததால் கிணத்துக்கடவு பகுதியில் சில இடங்களில் இருந்து வரும் தக்காளிகள் கூடுதல் விலைக்கு ஏலம் போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி யாரும் எதிர்பார்க்காத நிலையில் 108 ரூபாய்க்கு ஏலம் போனது.

சரியான எடை அளவு

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-கடந்த சில மாதங்களாக தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் கடும் சிரமத்தில் இருந்த எங்களுக்கு கடந்த சில நாட்களாக அதிக விலை கிடைத்து வருவது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் தற்போது தக்காளி உற்பத்தி குறைவாக உள்ளதால் இந்த விலை கிடைத்துள்ளது என்றனர்.இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:- தக்காளி விலை இந்த ஆண்டு இந்த அளவிற்கு வந்திருப்பது மிக அதிர்ச்சியாக உள்ளது. காரணம் தக்காளி உற்பத்தி தமிழகத்தில் குறைவாக உள்ளதால் அந்தந்த பகுதியில் விளையும் தக்காளிகளுக்கு கூடுதல் விலை கிடைத்துள்ளது. வழக்கம்போல் தக்காளி ஒரு பெட்டிக்கு 14 கிலோ எடை இருக்கும். ஆனால் தற்போது விலை உயர்வு காரணமாக தக்காளி பெட்டியின் எடை குறைவாக உள்ளது. 14 கிலோ வர கூடிய தக்காளிப் ெபட்டியில் தற்போது 12.5 கிலோ மட்டுமே தக்காளி இருக்கிறது. அப்படி இருக்கும் போது ஒரு கிலோ தக்காளி நேற்று நடைபெற்ற ஏலத்தின் படி பார்த்தால் 120 ரூபாய் ஆகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய் வரை விற்பனை செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை கமிஷன் கடை உரிமையாளர்கள் கண்காணித்து தக்காளி விலை அதிகரிக்க கூடிய காலகட்டத்தில் சரியான எடை அளவு கொண்டு வர விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story