வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி
அன்னவாசல் பகுதியில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.40-க்கு விற்பனையாகிறது.
விலை உயர்வு
ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் தக்காளி, கடந்த சில வாரங்களாக ஆப்பிள் பழத்துக்கு நிகராக விலை அதிகரித்து காணப்பட்டது. நாடு முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.200 வரை தக்காளி விலை போனதால் ஏழை, நடுத்தர மக்கள் சமையலில் தக்காளியை தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மேலும் சிலர் தக்காளியை குறைவான அளவில் மட்டும் வாங்கி பயன்படுத்தி வந்தனர். இந்த திடீர் விலையேற்றத்துக்கு வரத்து குறைவே காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இனிப்பான செய்தி
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதனால் அதன் விலையும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதன்படி முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல் வாரச்சந்தையில் தக்காளி வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்தது.
கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்ற நிலையில், நேற்று அதன் விலை ரூ.40-ஆக வீழ்ச்சியடைந்தது. இது தற்போது இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது. வாரச்சந்தையில் தக்காளி விலை குறைந்துள்ள போதிலும் தள்ளுவண்டி, சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
மேலும் குறையும்
தக்காளி விலை சரிந்தது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக கிலோ ரூ.80 வரை விற்பனையான தக்காளி தற்போது பாதியாக குறைந்து ரூ.40-க்கு விற்பனை செய்கிறோம். இன்னும் பொடி ரக தக்காளி 3 கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்கிறோம். தற்போது தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் குறையும் என்றார்.
தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.