கோவையில் தக்காளி விலை குறைந்தது


கோவையில் தக்காளி விலை குறைந்தது
x
தினத்தந்தி 10 Aug 2023 1:00 AM IST (Updated: 10 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கோவையில் தக்காளி விலை குறைந்தது. உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்


ஆர்.எஸ்.புரம்


வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கோவையில் தக்காளி விலை குறைந்தது. உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.


விலை உயர்வு


நாடு முழுவதும் கடந்த மாதம் தக்காளி விலை கிடு, கிடுவென உயர்ந்தது. இதில் கோவையில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.


தக்காளி விலையுடன் போட்டி போடும் அளவிற்கு சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்தது. மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.150 வரை விற்பனையானது.


மேலும் தக்காளின் விலை அதிகரிப்பால் ஓட்டல்களில் தக்காளி சட்டினி வைப்பது நிறுத்தப்பட்டது. பல ஓட்டல்களில் தக்காளி சாதம் விற்பனையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


விலை குறைய தொடங்கியது


இந்த நிலையில் கிடு, கிடுவென உயர்ந்த தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் விலை எப்போது குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் கோவை கிணத்துகடவு, நரசீபுரம், பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் கோவைக்கு தக்காளி வரத்து அதிகரித்தது. இதையடுத்து கோவையில் தக்காளி விலை குறைந்து உள்ளது. மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.70-க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சின்ன வெங்காயமும் கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையாகிறது.


கோவை சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம் ஆகிய உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு தக்காளி வாங்கி சென்றனர். கடந்த மாதம் கோவையில் உள்ள உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையானது குறிப்பிடத் தக்கது.


வரத்து அதிகரிப்பு


தக்காளி விலை குறைந்தது குறித்து கோவை தக்காளி வியாபாரி காதர் பாட்ஷா கூறியதாவது:-


இந்த மாதம் 1-ந் தேதி முதல் தக்காளி விலை குறைய தொடங்கியது. தற்போது கர்நாடகாவில் இருந்து நாள்தோறும் 60 டன்னும், பழனி, ஒட்டன்சத்திரம், கிணத்துக்கடவு, நரசீபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 25 டன் தக்காளியும் விற்பனைக்கு வருகிறது. வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை குறைந்துள்ளது சில்லறை விலையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.70-ம், ஆப்பிள் தக்காளி ரூ.80-க்கும் விற்பனையாகிறது. தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரித்தால் விலை மேலும் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story