தக்காளி விலை சற்று உயர்வு
கிணத்துக்கடவு சந்தையில் தக்காளி விலை சற்று உயர்ந்தது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தக்காளிகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு கிணத்துக்கடவு பகுதியில் பருவமழை சரிவர பொய்யாததால் செஞ்சேரிமலை, நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்துதான் அதிகளவில் தக்காளிகள் வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.100-ஐ தாண்டி உச்சத்தில் இருந்த தக்காளி விலை, அதன்பிறகு கிடு கிடுவென குறைய தொடங்கியது. இதனால் கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.11-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 8 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது.
மேலும் ஒரு கிலோ தக்காளி ரூ.16.50-க்கு ஏலம் போனது. வீழ்ச்சிக்கு பிறகு மீண்டும் விலை உயர தொடங்கி உள்ளதால், விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்து உள்ளனர்.