தக்காளி வியாபாரி வெட்டிக்கொலை


தக்காளி வியாபாரி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 11 Oct 2023 12:15 AM IST (Updated: 11 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரையில் திருமணமான மகளிடம் பழகியதை தட்டிக்கேட்ட தக்காளி வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தக்காளி வியாபாரி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் முனியாண்டி. தக்காளி வியாபாரி. இவரது 17 வயது மகளிடம் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலசுப்பிரமணியன் (26) என்பவர் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த முனியாண்டி தனது மகளை கண்டித்துள்ளாராம். மேலும் தனது மகளை சிவகங்கையை சேர்ந்த சபரி என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருமணம் செய்து கொடுத்தார். இருப்பினும் அந்த இளம்பெண்ணிடம் பாலசுப்பிரமணியன் தொடர்ந்து பழகி வந்தாராம்.

இந்நிலையில் நேற்று சபரி, அவரது சகோதரர் காளீஸ்வரன், நண்பர் அன்புகூரி, முனியாண்டி ஆகியோர் பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு நேரில் சென்று இதுதொடர்பாக தட்டிக்கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.

வெட்டிக்கொலை

அதில் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன், அவரது தந்தை தனசேகரன் (48), நண்பர் கார்த்திக்ராஜா (25) ஆகியோர் சேர்ந்து முனியாண்டி, அன்புக்கூரியை அரிவாளால் வெட்டினர். படுகாயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் முனியாண்டி பரிதாபமாக இறந்தார். அன்புக்கூரி மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் இந்த தகராறில் கார்த்திக்ராஜாவும் காயம் அடைந்தார். அவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

4 பேர் கைது

இதையடுத்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணி, தனசேகரன் ஆகியோரையும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக பாலசுப்பிரமணியன் தாயார் மாலா (47), அக்காள் சத்தியா (27) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் மானாமதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story