தக்காளி கிலோ ரூ.200-ஐ எட்டியது: இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி
தக்காளி விலை புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனை ஆகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை,
அப்படி என்னதான் கோபமோ... என்று எண்ணும் அளவுக்கு, தக்காளி விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது. அண்டை மாநிலங்களில் மழை, தமிழ்நாட்டில் போதிய விளைச்சல் இல்லாதது போன்ற காரணங்களால் தக்காளி விலை தாறுமாறாக எகிறியது. கடந்த 13-ந்தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.140 வரை விற்கப்பட்டது. இதுதான் மொத்த மார்க்கெட்டில் அதிகபட்ச விலை உயர்வாக இருந்தது.
அதன் பிறகும் தக்காளி விலை ஏற்ற இறக்கத்துடனேயே காணப்பட்டது. கடந்த மாதம் 28-ந்தேதி மீண்டும் ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனை ஆனது. அதே வேளை வெளிச்சந்தையில் தக்காளி ரூ.180 முதல் ரூ.190 வரை விற்பனை ஆனது. இதனால் இல்லத்தரசிகள் கலக்கத்திலேயே இருந்து வந்தனர். தக்காளி விலை எப்போதுதான் ஓயுமோ... என்று வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர்.
ரூ.200-ஐ எட்டியது
இந்த நிலையில் பேரதிர்ச்சியாக, தக்காளி விலை நேற்று மீண்டும் உயர்ந்தது. தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.150-க்கு நேற்று விற்பனை ஆனது. கோயம்பேடு மார்க்கெட்டின் சில்லரை விற்பனை கடைகளில் ரூ.160-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
மொத்த மார்க்கெட்டிலேயே இந்த விலை என்றால், வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ரூ.180 முதல் ரூ.190 வரை விற்கப்பட்டது. சில காய்கறி அங்காடிகளில் தக்காளி விலை ரூ.200-க்கு விற்பனை ஆனது. இரட்டை சதம் அடித்த தக்காளி விலை பொதுமக்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. தக்காளி விலை குறையும் வரை இனி தக்காளியை நினைத்தே பார்க்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். தக்காளி சட்னி பிரியர்களும் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
வியாபாரிகள் கவலை
இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் காய் கனி மலர் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:-
தக்காளி வரத்து போதிய அளவுக்கு இல்லாததாலேயே அதன் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த வண்ணம் இருக்கிறது. 800 டன் வரை வந்த நிலையில், தற்போது 250 டன் வரை மட்டுமே தக்காளி வரத்து இருக்கிறது.
இதனாலேயே தக்காளி விலை உச்சத்தில் இருக்கிறது. ஒரு சில பெரிய வியாபாரிகள் தவிர மற்ற வியாபாரிகள் அனைவருமே இதனால் வருத்தத்தில்தான் இருக்கிறார்கள். தக்காளி வரத்து சீராகும் வரை அதன் விலை குறைய வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.