டாம்கோ, டாப்செட்கோ கடனுதவி மேளாக்கள்
ஆற்காடு, கலவை தாலுகாக்களில் டாம்கோ, டாப்செட்கோ திட்டத்தின்கீழ் கடன் மேளாக்கள் நடைபெறுகின்றன. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்காடு, கலவை தாலுகாக்களில் டாம்கோ, டாப்செட்கோ திட்டத்தின்கீழ் கடன் மேளாக்கள் நடைபெறுகின்றன. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டாம்கோ கடன் திட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், புத்தமதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவை சேர்ந்தவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் டாம்கோ மூலம் தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறுகடன் திட்டம், கல்விக்கடன், கறவை மாடு வாங்க கடனுதவி மற்றும் ஆட்டோ கடன் ஆகிய கடனுதவிகள் வழங்கப்படுகிறது.
இத்திட்டங்களின் கீழ் கடன் பெற 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
டாப்செட்கோ கடன் திட்டம்
மேலும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் பொது கால கடன் திட்டம், சுய உதவிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள பெண்களுக்கான சிறு கடன் வழங்கும் திட்டம் (மகிளா சம்ரிதி யோஜனா), சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள ஆடவருக்கான சிறுகடன் திட்டம், கறவை மாட்டுக்கடன், சிறு, குறு விவசாயிகளுக்கான நீர்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்டம் ஆகிய கடனுதவிகள் வழங்கப்படுகிறது.
சான்றுகள்
டாம்கோ மற்றும் டாப்செட்கோ திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள், திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்), ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்களுக்கு கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்), வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டையுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
ஆற்காடு தாலுகாவில் இதற்கான கடன் மேளாக்கள் இன்று (புதன்கிழமை) ஆற்காடு நகர கூட்டுறவு வங்கியிலும், நாளை ஆற்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், 4-ந் தேதி வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியிலும் (லட்சுமி தியேட்டர் அருகில்) நடைபெறுகிறது.
கலவை தாலுகாவில் 9-ந் தேதி கலவை காமதேனு கூட்டுறவு வங்கியிலும், 10-ந் தேதி கலவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், 11-ந் தேதி கலவை மத்திய கூட்டுறவு வங்கியிலும், 12-ந் தேதி மாம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் நடைபெறுகிறது.
இந்தக் கடன் மேளாக்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.