நாளை காலை 10.15 மணிக்கு தி.மு.க மீதான ஊழல் பட்டியல்; நேரம் குறித்த அண்ணாமலை


நாளை காலை 10.15 மணிக்கு தி.மு.க மீதான ஊழல் பட்டியல்; நேரம் குறித்த அண்ணாமலை
x
தினத்தந்தி 13 April 2023 11:58 AM IST (Updated: 13 April 2023 12:00 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல்களை குறிப்பிட்ட நேரத்தில் அண்ணாமலை வெளியிடுவாரா அல்லது பின் வாங்குவாரா என்ற கேள்வி எழுந்திருந்தது.

சென்னை

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல் தி.மு.க.- பா.ஜ.க.வினர் இடையே கருத்து மோதல் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சி மீதான முதல் குற்றச்சாட்டாக தமிழ்நாடு மின் வாரியத்தில் முறைகேடாக கோபாலபுரத்திற்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர் வழங்கப்படுவதாக பா.ஜ.க. சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து முதல்-அமைச்சரின் துபாய் பயணத்தையும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனையடுத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்குதில் ஆவின் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்காமல் தனியார் துறைக்கு டெண்டர் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்த அண்ணாமலை, தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கொடுத்தார்.

இதன் காரணமாக தி.மு.க.வினரும் பா.ஜ.க.வினரின் மீதான குற்றச்சாட்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக தெரிவித்தார்கள். அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் ரபேல் வாட்ச்க்கான பில்லை திமுகவினர் கேட்டனர். ஆனால் இதுவரை வாட்ச் பில்லை வெளியிடாத அண்ணாமலை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்தார்.

மேலும் அரவங்குறிச்சி தேர்தலில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்த பணம் யாருடையது எனவும் அண்ணாமலையிடம் திமுகவினர் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்தநிலையில் தான் சமூக வலை தளத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினர் மற்றும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட இருப்பதாக அண்ணாமலை கூறினார்.

தற்போது நடைபெற்று வரும் ஆட்சி மட்டுமில்லாமல் கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களையும் வெளியிட இருப்பதாக அண்ணாமலை கூறினார்.

தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல்களை குறிப்பிட்ட நேரத்தில் அண்ணாமலை வெளியிடுவாரா அல்லது பின் வாங்குவாரா என்ற கேள்வி எழுந்திருந்தது.

இந்தநிலையில் அண்ணாமலை தற்போது வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, அழகிரி உள்ளிட்டவர்களின் படங்களை பதிவிட்டு நாளை காலை 10.15 மணிக்கு திமுக பைல்ஸ் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.




Next Story