நாளை நடக்கிறது: மதுரை மாநாடு இந்தியா கூட்டணிக்கு வலுசேர்க்கும்- எதிர்கால திட்டத்தையும் அறிவிப்பேன் என வைகோ பேட்டி


நாளை நடக்கிறது: மதுரை மாநாடு இந்தியா கூட்டணிக்கு வலுசேர்க்கும்- எதிர்கால திட்டத்தையும் அறிவிப்பேன் என வைகோ பேட்டி
x

மதுரையில் நாைள நடைபெறும் மாநாட்டில் என் எதிர்கால திட்டத்தை அறிவிக்க உள்ளேன் என்றும், இந்த மாநாடு இந்தியா கூட்டணிக்கு வலுசேர்க்கும் எனவும் மதுரையில் வைகோ கூறினார்.

மதுரை


மதுரையில் நாைள நடைபெறும் மாநாட்டில் என் எதிர்கால திட்டத்தை அறிவிக்க உள்ளேன் என்றும், இந்த மாநாடு இந்தியா கூட்டணிக்கு வலுசேர்க்கும் எனவும் மதுரையில் வைகோ கூறினார்.

நாளை மாநாடு

அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை வலையங்குளம் பகுதியில் ம.தி.மு.க. சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) மாநில மாநாடு நடக்கிறது. மாநாட்டு ஏற்பாடுகளை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று பார்வையிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரையில் நடக்கும் இந்த மாநாடு ம.தி.மு.க.விற்கு புதிய உந்துதலை தரும். நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகரித்து, சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது.

மத்திய அரசை இயக்கி கொண்டிருக்கிற பிரதமர் மோடி, சர்வாதிகார பிரதமராக இருக்கிறார். ஹிட்லர் போல், முசோலினி போல் மாற முயற்சிக்கிறார். அவர்கள் என்னதான் முயற்சி செய்தாலும், தமிழகத்தில் அவர்களால் கால் வைக்க முடியாது. இது அண்ணாவும், பெரியாரும் பக்குவப்படுத்திய மண்.

திராவிட இயக்கத்தை பாதுகாக்க பலரும் பாடுபட்டனர். அதன்வழியில் தற்போது திரவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. இந்த ஆட்சியை இந்தியாவில் உள்ள அனைவரும் திரும்பி பார்க்கிறார்கள்.

மு.க.ஸ்டாலினுக்கு மரியாதை

மும்பையில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் வடநாட்டு தலைவர்கள், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எப்படி மரியாதை கொடுக்கிறார்கள் என்பதை நேரில் கண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

மத்திய அரசின் சர்வாதிகார போக்கை நிறுத்தவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றி வருகிறார். அவரால் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இந்தியா கூட்டணிக்கு, இந்த மாநாடு வலுசேர்க்கும்.

நீட் தேர்வு

நீட் தேர்வு வாக்குறுதியை சொன்னபடி நிறைவேற்ற முடியாமல் போனதற்கு மத்திய அரசுதான் காரணம். மத்திய அரசு உடும்பு பிடியாக இருப்பதால் நீட் தேர்வில் ஒன்றும் செய்யமுடியவில்லை.

சாதி பிரிவினையை ஏற்படுத்தி இந்தியாவில் சனாதனத்தை நிலை நாட்ட நினைக்கிறார்கள், அது ஒருபோதும் நடக்காது.

விசுவகர்மா யோஜனா என்பது பழைய குலக்கல்வி திட்டம்தான். இதற்கு பெரிய எதிர்ப்பு கிளம்பும். தமிழகத்தில் ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பிவிட்டது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூறினாலும் தண்ணீர் கொடுக்கமாட்டோம் என கர்நாடக அரசு பிடிவாதமாக உள்ளது.

பாய வேண்டிய நேரத்தில் பாயும்

சிங்கத்தின் கர்ஜனையை கொஞ்ச நாளாக காண முடியவில்லை என்று விமானத்தில் வரும்போது ஒருவர் என்னிடம் கூறினார். அதற்கு புலி பாய வேண்டிய நேரத்தில் பாயும் என்று பதில் அளித்தேன். மேலும், மதுரை மாநாட்டில் என் எதிர்கால திட்டத்தையும் அறிவிக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் பூமிநாதன் எம்.எல்.ஏ., மாநில துணை பொது செயலாளர்கள் ராஜேந்திரன், ரொகையா, மாவட்ட செயலாளர்கள் முனியசாமி, மார்நாடு, வெள்ளைமண்டி சோமு, ஜெயராமன், ஜீவன், செய்தி தொடர்பாளர் முகமது அலி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story