மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணாக்கப்பட்ட அவலம்
மதுரை அ.தி.மு.க. மாநாட்டு பந்தலில் அண்டா, அண்டாவாக உணவு தரையில் கொட்டப்பட்டு கிடக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
மதுரை,
அ.தி.மு.க. பொன்விழா ஆண்டையொட்டி மதுரை வலையங்குளம் பகுதியில் நேற்று பிரமாண்ட மாநாடு நடைபெற்றது. இதற்காக 60 ஏக்கர் திடலில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.நேற்று முன்தினமே மாநாட்டு திடலில் அலைகடலென தொண்டர்கள் திரண்டனர். நேற்று காலை லட்சக்கணக்கானோர் வந்திருந்தனர்.
மாநாட்டை தொடங்கிவைக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலை 8.45 மணிக்கு மண்டேலா நகர் பகுதிக்கு வந்தார். தாரை தப்பட்டை முழங்க ஒயிலாட்டம், கரகாட்டத்துடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணியளவில் எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் பேசினார். முன்னதாக, மாநாட்டில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுக்கு உணவு வழங்க பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மாநாட்டு பந்தலிலே மூன்று இடங்களில் பிரம்மாண்ட உணவுக் கூடங்கள் அமைத்து 10,000 தொழிலாளர்கள் உணவு சமைத்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சாம்பார் சாதம், புளியோதரை சாதம் போன்றவை தயார் செய்து தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது. மொத்தம் 10 லட்சம் பேருக்கு உணவுகள் தயார் செய்யப்பட்டதாக அ.தி.மு.க.வினர் கூறியிருந்தனர்.
மாநாடு முடிந்த நிலையில் நேற்று மாநாட்டு பந்தலில் அண்டா, அண்டாவாக டன் கணக்கில் உணவு வீணாக தரையில் கொட்டப்பட்டு உள்ளது. உணவுகளை இப்படி பொறுப்பற்ற முறையில் மாநாட்டு சமையல் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கொட்டிச் சென்றது பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். 'மாநாட்டுப் பொறுப்பாளர்கள் மீதமான இந்த உணவுகளை உடனடியாக, உணவுக்காக அல்லல் படும் மக்களுக்கு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்து இருக்கலாம்' என்று விமர்சித்து வருகிறார்கள்.