பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: தர்மபுரி மாணவி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம்
தர்மபுரி
பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலில் தர்மபுரியை சேர்ந்த அரசு பள்ளி மாணவி மகாலட்சுமி 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மாநில அளவில் முதலிடம்
பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நேற்று வெளியிட்டது. தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி மகாலட்சுமி 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டு பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் பிளஸ்- 2 தேர்வில் 579 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
தர்மபுரி அன்னசாகரத்தை சேர்ந்த மாணவி மகாலட்சுமியின் தந்தை சீனிவாசன் தனியார் நிறுவன ஊழியர். தாயார் சுஜாதா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ரேணுஸ்ரீ என்ற தங்கை உள்ளார். சாதனை படைத்த மாணவிக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
ஊக்கம் அளித்ததே காரணம்
இதுகுறித்து மாணவி மகாலட்சுமி கூறியதாவது:-
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நான் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைபள்ளியில் படித்தேன். நன்றாக படித்ததால் அரசு மாதிரி பள்ளியில் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. பின்னர் சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளியில் படித்தேன். 200 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பாடம் நடத்திய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அளித்த ஊக்கமே இதற்கு முக்கிய காரணம். இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைக்காவிட்டால் பொறியியல் படிப்பில் சேர்ந்து படிக்க திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.