தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் : எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல் ;பாதுகாப்பு கேட்டு மனு
எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இருவரும் தனித்தனியாக ஆதரவாளர்களை திரட்டி செயல்பட்டு வருகிறார்கள்.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்திலும் ஈடுபட்டு வருகிறார். சென்னையில் இருந்து சேலம் செல்லும் போதும், சேலத்தில் இருந்து திரும்பி சென்னை வரும் போதும் வழி நெடுக ஆதரவாளர்கள் திரண்டு நின்று எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்து வருகிறார்கள்.
இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் அவரது முக்கிய ஆதரவாளர்களும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் காரசாரமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தினத்துக்கு பிறகு தென் மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி சென்று அங்கிருந்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களிலும் மதுரை மற்றும் தேனி மாவட்ட பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்வதற்கு ஆயத்தமாகி வருகிறார். அவரது இந்த சுற்றுப் பயணத்தின் போது அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலத்தை சேர்ந்த அ.தி.மு.க. வக்கீல் மணிகண்டன் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். 5 மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை முடித்துள்ளார். அவர் செல்லும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
ஆகஸ்டு 15-ந் தேதிக்கு பிறகு தென் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப் பயணத்தின் போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களாலும் மற்ற சமூக விரோதிகளாலும் எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.
முன்னாள் முதல்-அமைச்சராகவும், தற்போது எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அவரது பாதுகாப்பை அதிகரித்து உச்சபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.