கோடை சீசன் முடிந்தாலும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
கோடை சீசன் முடிந்தாலும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
ஊட்டி
கோடை சீசன் முடிந்தாலும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
கோடை சீசன்
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். மே மாதம் கோடை விழாவையொட்டி ஊட்டியில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். கோடை சீசனில் நீலகிரிக்கு 8½ லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
இந்தநிலையில் கடந்த 31-ந் தேதியுடன் கோடை சீசன் நிறைவு பெற்றது. இருப்பினும், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 7-ந் தேதி என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கோடை விடுமுறையை கழிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வருகை தருகின்றனர்.
படகு சவாரி
இதேபோல் கேரள மாநிலத்தில இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. அங்கு மலர் மாடத்தில் காட்சி வைக்கப்பட்டு இருந்த பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய மலர்களை பார்வையிட்டனர். அதன் பின்னணியில் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அங்குள்ள பெரிய புல்வெளி மைதானத்தில் குழந்தைகளுடன் விளையாடி பொழுதை கழித்தனர். நேற்று ஒரே நாளில் தாவரவியல் பூங்காவுக்கு 12 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மிதி படகுகள், மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகுகளில் சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கண்டு ரசிப்பு
இதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்ததை காண முடிந்தது. கோடை சீசனான கடந்த மாதத்தில் ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது நெரிசல் இல்லாததால் சுற்றுலா பயணிகள் எளிதாக சுற்றுலா தலங்களுக்கு சென்று கண்டு ரசித்தனர்.