நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதனால் தொடர் விடுமுறையிலும் பூங்காக்கள் வெறிச்சோடின.
ஊட்டி
நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதனால் தொடர் விடுமுறையிலும் பூங்காக்கள் வெறிச்சோடின.
நிபா வைரஸ்
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக அம்மாநில எல்லையையொட்டி உள்ள நீலகிரி மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழக-கேரள எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் கேரளாவில் இருந்து வாகனங்களில் வருபவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என பரிசோதனைக்கு பின்னரே நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டியில் கழிக்கவும், 2-வது சீசனை அனுபவிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். மேலும் சுற்றுலா தலங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
வருகை குறைந்தது
ஆனால், நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக தொடர் விடுமுறையிலும் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ளது. கேரளா, கர்நாடகாவில் இருந்து சுற்றுலா பயணிகள் மிகவும் குறைவாகவே வந்திருந்தனர். வார விடுமுறையான நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. அங்கு பூத்து குலுங்கும் மலர்களை கண்டு ரசித்ததுடன், புல்வெளியில் அமர்ந்து குடும்பத்தினருடன் ஓய்வெடுத்தனர். இதேபோல் ஊட்டி படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடிய நிலையில் காட்சி அளித்தன. ஊட்டி படகு இல்லத்தில் ஏராளமான படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டு இருந்தன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சேரிங்கிராஸ் சாலை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து சுற்றுலா மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதாலும், தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடந்து வருவதாலும், எதிர்பார்த்த சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லை என்றனர்.