பெரம்பலூர் அருகே வேன் மீது சுற்றுலா பஸ் மோதி 4 பேர் காயம்


பெரம்பலூர் அருகே பால் வேன் மீது சுற்றுலா பஸ் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் வேனில் இருந்த கேன்கள் சரிந்து விழுந்ததில் பால் சாலையில் ஓடியது.

பெரம்பலூர்

பால் வேன் மீது மோதல்

பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பால் கேன்களில் ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று ஆலத்தூர் தாலுகா, திருவளக்குறிச்சியில் உள்ள பாடாலூர் ஆவின் பால் பண்ணைக்கு நேற்று காலை சென்று கொண்டிருந்தது. பால் வேனை பாடாலூர் தெற்கு தெருவை சேர்ந்த ராஜாவின் மகன் ரமேஷ் (வயது 24) என்பவர் ஓட்டினார். வேனில் பெரம்பலூரை சேர்ந்த ரவி என்பவரும் பயணம் செய்தார்.

காலை 7.45 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் கேட் பஸ் நிறுத்தம் எதிரே வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் சென்னையில் இருந்து மூணாறு நோக்கி வந்த சுற்றுலா பயணிகளுடன் வந்த பஸ், பால் வேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

சாலையில் ஆறாக ஓடிய பால்

இதில் பால் வேன் நெடுஞ்சாலையின் மைய தடுப்புச்சுவரில் இருந்த மின் விளக்கு கம்பம் மீது மோதி நின்றது. இதில் மின் விளக்கு கம்பம் சரிந்து எதிரே உள்ள சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் ஏதும் வராததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. விபத்துக்குள்ளான பால் வேனில் இருந்த கேன்களில் சில சரிந்து விழுந்தன. இதில் அந்த கேன்களில் இருந்த பால் சாலையில் ஆறாக ஓடியது.

இந்த விபத்தில் சுற்றுலா பஸ் டிரைவர் சென்னை பெரம்பூர் ரமணா நகரை சேர்ந்த முஜிப் ரகுமானின் மகன் முகமது ரியாஸ் (25), பஸ்சில் பயணம் செய்த 16 சுற்றுலா பயணிகளில் 3 பெண்கள் காயமடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தினால் நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்க தொடங்கின. இந்த விபத்து குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்களை போலீசார் அணுகு சாலையில் திருப்பி விட்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

பின்னர் விபத்துக்குள்ளான பால் வேன், சுற்றுலா பஸ் மற்றும் மின் கம்பத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story