கார் மரத்தில் மோதி சுற்றுலா பயணி சாவு
சேந்தமங்கலம்:-
கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் கார் மரத்தில் மோதி சுற்றுலா பயணி பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
விற்பனையாளர்
ஈரோடு மாவட்டம் பவானி பெரியார் நகரை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 39). இவர், கோபிசெட்டிபாளையத்தில் காபி நிறுவனம் ஒன்றில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று அதிகாலை பவானியில் இருந்து ஒரு வாடகை கார் மூலம் தன்னுடைய மனைவி, சித்தப்பா மற்றும் சித்தப்பா மனைவி ஆகிய 4 பேருடன் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தார்.
பரிதாப சாவு
கொல்லிமலையில் 67-வது கொண்டை ஊசி வளைவு அருகில் சாலையோரம் உள்ள மரத்தில் கார் திடீரென மோதியது. இதில் காரில் இருந்த ரகுநாதன் பலத்த காயமும், டிரைவர் உள்பட 4 பேர் லேசான காயமும் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ரகுநாதன் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.