கொரோனாவுக்கு பிறகு தஞ்சைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு


கொரோனாவுக்கு பிறகு தஞ்சைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
x

கொரோனாவுக்கு பின்னர் தஞ்சைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

கொரோனாவுக்கு பின்னர் தஞ்சைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா தலம்

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுள் தஞ்சை மாவட்டமும் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு உலகப்புகழ்பெற்ற பாரம்பரிய நினைவு சின்னமாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில் உள்ளது. கோவில் கட்டப்பட்டு 1010 ஆண்டு களுக்கு மேல் ஆகிறது. ஆனாலும் இன்னும் இந்த கோவில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.இது தவிர தஞ்சையில் அரண்மனை, அருங்காட்சியகம் மற்றும் மாவட்டத்தில் கல்லணை, மனோரா, தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் உள்ளன. மேலும் பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மற்றும் கோவில்கள் நகரமான கும்பகோணத்தில் பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன.

வெளிநாட்டு பயணிகள்

இப்படியாக வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சைக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டு முழுவதும் அதிக அளவில் காணப்படும். குறிப்பாக தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் தஞ்சைக்கு வருகை தருவார்கள். இவ்வாறு வருபவர்கள் பெரிய கோவில், அரண்மனை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தவறுவதில்லை.தஞ்சைக்கு மட்டும் நாள்தோறும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள். குறிப்பாக ஆண்டுக்கு 2½ லட்சம் பேர் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இது தவிர வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் பேர் வரை மாதந்தோறும் வந்து செல்வார்கள்.

கொரோனாவால் குறைந்தது

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. வெளிநாட்டுக்கு விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன. பின்னர் கொரோனா தொற்று குறையத்தொடங்கியதையடுத்து ஊரடங்கிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.ரெயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து தொடங்கிய நிலையிலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை என்பது தஞ்சைக்கு நின்று விட்டது என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. மாதத்துக்கு 3 ஆயிரம் பேர் வரை சுற்றுலா பயணிகள் வந்த இடத்தில் 300 பேர் மட்டுமே வந்து சென்றார்கள்.

வருமானமும் பாதிப்பு

இந்த நிலையில் தஞ்சைக்கு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதிலும் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.சாதாரண நாட்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உள்நாட்டு பயணிகள் வருகை வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தற்போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அய்யப்ப பக்தர்கள் என சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது அதிகரித்து வருகிறது.உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தாலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை இன்னும் அதிகரிக்கவில்லை. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இல்லாததால் தஞ்சையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் வருமானம் வெகுவாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் அடுத்த ஆண்டில் (2023 இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story