நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது:ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
பென்னாகரம்:
ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. வார விடுமுைறயையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல் அருவி
கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் குறைந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதற்கிடையே நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு நேற்று முன்தினம் முதல் பரிசல் சவாரி தொடங்கியது. இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களில் குளித்தனர்.
இதையடுத்து குடும்பத்தினர், நண்பர்களுடன் முதலைப்பண்ணை, தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிபார்த்து விட்டு பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
கண்காணிப்பு
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.