வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பென்னாகரம்:
சுற்றுலா தலமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கர்நாடக, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து செல்வார்கள். அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பரிசலில் சென்று மகிழ்வார்கள். இதனிடையே ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடைகளில் விற்பனை படுஜோராக நடந்தது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.