கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி


கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
x
தினத்தந்தி 30 Sep 2023 1:15 AM GMT (Updated: 30 Sep 2023 1:16 AM GMT)

நீர்வரத்து சீரானதையொட்டி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தேனி

கும்பக்கரை அருவி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படுகிறது. மழை பெய்யும் காலங்களில் இந்த அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த அருவியில் குளிப்பதற்காக தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதேபோல் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் கும்பக்கரை அருவிக்கு வந்து குளித்துவிட்டு செல்கின்றனர்.

இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது. அதன்பிறகும் மழை தொடர்ந்து பெய்த வண்ணம் இருந்தது. இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து அருவிக்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

குளிக்க அனுமதி

இந்தநிலையில் நேற்று கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சற்று குறைந்தது. இதையடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென்று அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

இருப்பினும் அருவியில் தண்ணீர் அதிகமாக ஆர்ப்பரித்து கொட்டியதால் பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்களால் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் அருவியின் மேல் பகுதியில் உள்ள பள்ளத்தில் குளித்தனர். சிலர் அருவியில் ஓரமாக நின்றபடி குளித்தனர். இளைஞர்கள் அருவி பகுதியில் குளித்து உற்சாகம் அடைந்தனர். கடந்த 10 நாட்களாக கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், தொடர் விடுமுறை காரணமாகவும் வரும் நாட்களில் கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அருவி பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story