காட்டு யானைகள் நடமாட்டம் எதிரொலி; சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதால், சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதால், சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
சுருளி அருவி
தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக சுருளி அருவி உள்ளது. இந்த அருவி புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. இதனால் சுருளி அருவியில் குளிப்பதற்காக தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், மூணாறு செல்லும் வெளிமாநில சுற்றுலா பயணிகளும் தினமும் வருகை தருகின்றனர்.
குறிப்பாக ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, தை அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருவியில் புனித நீராடி அங்குள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
காட்டு யானைகள் முகாம்
சுருளி அருவி அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது. இதனால் அவ்வப்போது காட்டு யானைகள் அருவி பகுதிக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் தினமும் காலையில் வனத்துறையினர் அருவி பகுதியில் ஆய்வு செய்வார்கள்.
அதன் அடிப்படையிலேயே சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவர். அந்த வகையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அருவி பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இதனால் சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 2 நாட்களில் யானைகள் அங்கிருந்து இடம்பெயர்ந்தன. பின்னர் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
குளிக்க தடை
இந்தநிலையில் நேற்று காலை சுருளி அருவியில் நீர்வரத்து சீராக இருந்தது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் முன்பு கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் வனப்பகுதியில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அருவிக்கு அருகில் 10 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இதனை பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதன் எதிரொலியாக சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தனர். இதனால் நேற்று அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
விரட்ட நடவடிக்கை
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "சுருளி அருவியின் அருகில் 10 காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காட்டு யானைகள் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதேபோல் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று (வியாழக்கிழமை) ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சுருளி அருவியில் ஏராளமான பொதுமக்கள் புனிதநீராடி வழிபாடு செய்வார்கள். ஆனால் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் ஆடிப்பெருக்கையொட்டி பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இரவுக்குள் யானைகள் இடம்பெயர்ந்தால், அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும்" என்றனர்.