டால்பின் நோஸ் காட்சி முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குன்னூர் அருகே டால்பின் நோஸ் காட்சி முனையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.
குன்னூர்
குன்னூர் அருகே டால்பின் நோஸ் காட்சி முனையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.
கேத்ரின் நீர்வீழ்ச்சி
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. குன்னூரில் தோட்டக்கலைத்துறையின் கீழ் சிம்ஸ் பூங்கா மற்றும் இயற்கை காட்சி முனைகளான லேம்ஸ்ராக், டால்பின் நோஸ், காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.
கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை கழிப்பதற்காக கடந்த சில நாட்களாக நீலகிரிக்கு கேரள சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் நேற்று குன்னூர் அருகே டால்பின் நோஸ் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். டால்பின் நோஸ் காட்சி முனையில் உள்ள பாறை டால்பின் மீனின் மூக்கு போன்று இருப்பதை கண்டு ரசித்தனர். மலையில் இருந்து வெள்ளியை உருக்கியதை போல் ஆர்ப்பரித்து கொட்டும் கேத்ரின் நீர்வீழ்ச்சியை பார்வையிட்டனர்.
செல்பி எடுத்து மகிழ்ச்சி
மேலும் காட்சி முனையில் இருந்து மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானி ஆறு, மலைகளை மோதி செல்லும் மேகக்கூட்டம் உள்ளிட்ட இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். அங்கு சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளின் பின்னணியில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தற்போது குன்னூரில் மழை மற்றும் மேகமூட்டமான சீதோஷ்ண காலநிலை நிலவி வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் அனுபவித்து வருகின்றனர்.
இதேபோல் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அங்கு கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர். தொடர்ந்து அலங்கார வேலிகள் முன்பு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அங்கு ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, இலை பூங்கா, பெரணி இல்லம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். ஊட்டி படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம் போன்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.