கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 30 Sep 2023 1:30 AM GMT (Updated: 30 Sep 2023 1:30 AM GMT)

தொடர் விடுமுறையையொட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன.

திண்டுக்கல்

தொடர் விடுமுறை

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக வார விடுமுறை, தொடர் விடுமுறை உள்ளிட்ட நாட்களில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம்.

தற்போது தொடர் விடுமுறை, பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் கொடைக்கானலில் அலைமோதியது. குறிப்பாக நேற்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் வருகை புரிந்தனர்.

வெள்ளி நீர்வீழ்ச்சி

நேற்று காலை முதல் நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்க கட்டணம் வசூல் செய்யும் மையத்தில் பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதால் ஒவ்வொரு வாகனங்களும் இந்த இடத்தை கடந்து செல்ல சில நிமிடங்கள் ஆகிறது. இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மலைப்பகுதிகளில் தற்போது அவ்வப்போது லேசான சாரல் மழையுடன் கூடிய கடும் குளிர் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிருக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிந்தபடியும், நெருப்பு மூட்டி குளிர்காய்ந்தும் சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களான பைன் மரக் காடுகள், பில்லர் ராக், குணா குகை, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இ்டங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

தங்கும் விடுதிகள் நிரம்பின

வெள்ளிநீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அந்த அருவிகளின் எழில் கொஞ்சும் காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன், புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இதேபோல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில், படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். தொடர் விடுமுறையையொட்டி வருகிற 2 நாட்களுக்கு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பலரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சுற்றுலா பயணிகளால் வருகை அதிகரித்ததால் நகர் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இதனால் முன்பதிவு செய்யாமல் வந்த சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.


Next Story