தொடர் விடுமுறை, புத்தாண்டையொட்டி குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்-ஆனந்தமாக குளித்து உற்சாகம்


தொடர் விடுமுறை, புத்தாண்டையொட்டி குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்-ஆனந்தமாக குளித்து உற்சாகம்
x
தினத்தந்தி 2 Jan 2023 12:30 AM IST (Updated: 2 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறை, புத்தாண்டையொட்டி குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்து ஆனந்தமாக குளித்து உற்சாகம் அடைந்தனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

தொடர் விடுமுறை, புத்தாண்டையொட்டி குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்து ஆனந்தமாக குளித்து உற்சாகம் அடைந்தனர்.

சுற்றுலா பயணிகள்

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஆழியார் வனப்பகுதியில் குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு திருப்பூர், மதுரை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இருசக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் வருவது வழக்கம். இந்தநிலையில் பள்ளி விடுமுறை மற்றும் புத்தாண்டு என தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு வந்தனர்.

ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் படையெடுத்தபடி வந்தனர். இதனால் அங்கு வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

குளித்து மகிழ்ந்தனர்

பின்னர் அவர்கள் குரங்கு நீர்வீழ்ச்சியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவுகளை குடும்பத்துடன் உண்டு மகிழ்ந்தனர். ஆனால் சோதனைச்சாவடியில் நீண்ட நேரம் காக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் பெரிதும் அவதிப்பட்டார்கள்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:- வால்பாறை, குரங்கு நீர்வீழ்ச்சி செல்ல அனுமதி சீட்டு பெற்று செல்லும் சோதனை சாவடியில் குறைவான ஊழியர்களும், ஒரே ஒரு அனுமதி சீட்டு கருவியும் உள்ளது. இதனால் சோதனை சாவடியில் இருந்து ஆழியார் பூங்கா வரை வாகனங்கள் அணி வகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்து நின்றதால் மிகவும் அவதிப்பட்டனர்.

உரிய பாதுகாப்பு இல்லை

சோதனை சாவடியில் வாகனங்களுக்கு 20 ரூபாயும், ஒரு நபருக்கு 30 ரூபாயும், குரங்கு நீர்வீழ்ச்சி செல்ல ரூ.50, பூங்கா செல்ல ரூ.25 வசூல செய்யப்படுகிறது. ஆனால் ஆழியாறு சாலை தரமானதாக இல்லை. மேலும் குரங்கு நீர்வீழ்ச்சியில் தடுப்பு கம்பிகளுக்கு பதில் மரத்தில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது. எனவே பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் கூடுதல் ஊழியர்களும் கூடுதல் அனுமதி சீட்டு பெறும் கருவிகளும் அமைக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story