மலர் கண்காட்சியை காண ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்...!


ஊட்டியில் மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

நீலகிரி


124-வது மலர் கண்காட்சி

நீலகிரியில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பிற துறைகள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளுக்கு தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கோடை விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது.

இந்தநிலையில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. நேற்று நடந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அப்போது இசை முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது

18 ஆயிரம் பேர்

இதற்கிடையே இந்த ஆண்டு விழாவின் சிறப்பு அம்சமாக 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஓரியண்டல் லில்லி, ஏசியாடிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, ஆஸ்டர், பால்சம், க்ரைசாந்திமம் போன்ற மலர்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளனர். இதில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பூச்செடிகளும் அடங்கும்.

எனவே கொரோனா பாதிப்பு காரணமாக 2 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் குளிர் கால நிலையால் எதிர்பார்த்த அளவுக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் வரவில்லை.

வழக்கமாக மலர் கண்காட்சி தினங்களில் வார இறுதி நாட்களில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வருவார்கள். ஆனால் நேற்று 12 ஆயிரம் பேரும், இன்று 18 ஆயிரம் பேர் மட்டுமே வந்தனர். மேலும் தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளி பகுதி ஈரமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் வழுக்கிக் கீழே விழும் நிலை உள்ளது. இதனால் மலர்ச் செடிகளை மட்டும் பார்வையிட்டு செல்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை தினமான நாளை கூட்டம் அதிகரிக்கலாம் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story