ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 25 Jun 2023 7:30 PM GMT (Updated: 26 Jun 2023 8:02 AM GMT)

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி ஏற்காடு, மேட்டூரில் குவிந்த சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்

சேலம்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி ஏற்காடு, மேட்டூரில் குவிந்த சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்.

சுற்றுலா பயணிகள்

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை சுற்றிபார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

இதையடுத்து அவர்கள் லேடிஸ் சீட், ஜென்ஸ்சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் மலைக்கோவில், கிளியூர் நீர்வீழ்ச்சி, அண்ணா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர்.

படகுசவாரி

இதற்கிடையே நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மேலும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் படகு இல்ல சாலையில் உள்ள கடைகளில் மிளகாய் பஜ்ஜி விற்பனை களைகட்டியது.

படகு சவாரி செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டியதால் படகு இல்லத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் வெகு நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

தாவரவியல் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அங்கு காட்டெருமை மேய்ந்ததை காணமுடிந்தது. இதனால் அப்பகுதிக்கு வந்த சில சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.

மேட்டூர்

இதேபோல் நேற்று மேட்டூரிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்களில் ஒரு சிலர் மேட்டூர் காவிரி ஆற்றில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்தனர். பின்னர் பூங்காவிற்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு தாங்கள் எடுத்து வந்த உணவை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். சிறுவர், சிறுமிகள் ராட்டினம், சறுக்கு போன்ற விளையாட்டு சாதனங்களில் விளையாடினர்.

ஒரு சிலர் அணையின் வலது கரைப்பகுதியில் உள்ள பவளவிழா கோபுரத்திற்கு சென்று அணையின் அழகை ரசித்தனர். இதன் காரணமாக மேட்டூர் பூங்கா மற்றும் பவள விழா கோபுரம் ஆகிய இடங்களில் நுழைவுவாயில் கட்டணமாக ரூ.40 ஆயிரத்து 615 வசூலானது குறிப்பிடத்தக்கது.


Next Story