வனத்தையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்-ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வேண்டுகோள்

வனத்தையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
பொள்ளாச்சி
வனத்தையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
வாகன சோதனை
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வனத்தில் வீசும் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களால் வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
இதை தடுக்க ஆழியாறு, சேத்துமடை பகுதிகளில் வனத்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள் வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்படுகிறது. இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் கூறியதாவது:-
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
வால்பாறை பகுதிகளில் சுற்றுலா தலங்களுக்கு ஆழியாறு வன சோதனை சாவடியை கடந்து தான் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டும். வனத்தையும், வன உயிரினங்களையும் பாதுகாக்கும் வகையில் மக்காத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில், மதுபாட்டில் மற்றும் சட்டவிரோத பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் ஆழியாறு வன சோதனை சாவடியில் 318.50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுலா பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பேப்பர் கவர்கள், மஞ்சப்பை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று 275 காலியான மதுபாட்டில்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் 2 பேரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மேல்நடவடிக்கைக்கு ஆழியாறு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். இனி வரும் காலங்களில் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து வனத்தையும், வன உயிரினங்களையும் மற்றும் வால்பாறையின் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வனத்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.