கோத்தகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறையையொட்டி கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கோத்தகிரி
கோடை விடுமுறையையொட்டி கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கோடை விடுமுறை
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. வருகிற 7-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. கோடை விடுமுறை மற்றும் மே மாதத்தின் கடைசி வார விடுமுறையான நேற்று நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். இதனால் சுற்றுலா தலங்களில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளின் தலைகளாகவே காட்சி அளித்தது.
கோத்தகிரி பகுதியில் நிலவும் இதமான சீதோஷ்ண காலநிலையை அனுபவிக்கவும், இங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு களிக்கவும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. கோத்தகிரியில் உள்ள கோடநாடு காட்சி முனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி, லாங்வுட் சோலை, நேரு பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு, சுற்றுலா பயணிகளால் நிரம்பி காணப்படுகிறது.
இயற்கை காட்சிகள்
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து ஏராளமான போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோத்தகிரி அரவேனு பகுதியில் உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி மற்றும் கோடநாடு காட்சி முனையில் இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
இதேபோல் நேரு பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில் ஏராளமான குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்று சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. அதை ஆர்வமுடன் கண்டுகளித்த அவர்கள், நீரூற்றின் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நேற்று கோத்தகிரி பகுதியில் மேகமூட்டத்துடன் கூடிய இதமான சீதோஷ்ண காலநிலை நிலவியது. இதற்கிடையே மதியம் திடீரென ½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் இதமான காலநிலையை அனுபவித்தனர்.