ஏற்காடு, மேட்டூர் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ஏற்காடு, மேட்டூர் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
சேலம்

மேட்டூர்:-

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுைறயொட்டி ஏற்காடு, மேட்டூர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

மேட்டூர்

தீபாவளி பண்டிகையை தொடர்ந்து நேற்று தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால், சுற்றுலாத்தலமான மேட்டூருக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

மேலும் அமாவாசை என்பதால் மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கூட்டமும் அதிக அளவில் இருந்தது. ஒரு சிலர் காவிரி ஆற்றில் புனித நீராடி அணைக்கட்டு முனியப்பனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் தாங்கள்எடுத்து வந்த உணவை அணைப்பூங்காவிற்கு எடுத்துச் சென்ற நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.

கட்டணம்

சிறுவர், சிறுமிகள் ராட்டினம், ஊஞ்சல் ஆகியவற்றில் விளையாடி இன்பமாக பொழுதை கழித்தனர். இதன் காரணமாக பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் மேட்டூர் அணை பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள மீன் வருவல் கடைகள், ஓட்டல்கள், தின்பண்டக் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பூங்காவிற்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் நிரம்பின. இதைத்தொடர்ந்து குள்ளவீரன்பட்டி சாலை முதல் மேட்டூர் ஒர்க் ஷாப் கார்னர் வரை உள்ள சாலைகளில் இருபுறங்களிலும் கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது. இது பார்ப்பதற்கு கார்களின் அணிவகுப்பு போல் காட்சியளித்தது. நேற்று ஒரே நாளில் பூங்கா நுழைவு கட்டணம் மற்றும் பவள விழா கோபுரம் நுழைவு கட்டணமாக ரூ.76 ஆயிரத்து 715 வசூலானது.

ஏற்காடு

இதே போல ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று இயற்கை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். வழக்கத்துக்கு மாறாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்ததால் முக்கிய சாலையான படகு இல்லம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அளவுக்கு அதிகமான வாகனங்கள் வந்ததால், போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் போலீசார் திணறினர்.


Next Story