தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் முதலாவது சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் ஊட்டியில் 2-வது சீசன் தற்போது களைகட்டி வருகிறது. இதனிடையே வார இறுதி, ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மலைரெயிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இது தவிர சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ரோஜா பூங்கா, பைக்காரா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அவலாஞ்சியில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். அரசு தாவரவியல் பூங்காவில் மலர் மாடம் மற்றும் கண்ணாடி மாளிகையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.